‘இலங்கையைப் பகைத்துக் கொண்டு ஆசியாவின் எந்தப் பகுதியிலும் இந்தியா இருக்க முடியாது!’

ந்தியாவுக்கு இலங்கை தந்துள்ள முதல் செருப்படி என்றுதான் இந்தக் கட்டுரைக்கு தலைப்பு தர நினைத்தோம். ஆனால் அதற்குள் இந்த பாழாய்ப் போன ‘இறையாண்மை’ நினைவுக்கு வந்து தொலைத்துவிட்டது.

‘கொஞ்ச நாள் கழித்துதான் இந்த மாதிரி கூத்துக்கள் அரங்கேறும்… வேடிக்கை பார்க்கத் தயாராகுங்கள்’ என தமிழக அரசியல் தலைவர் ஒருவர் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார், தனிப்பட்ட முறையில். அது இத்தனை சீக்கிரம் ஆரம்பமாகும் என்று நாம் நினைக்கவில்லை.

அது என்ன ‘செருப்படி’ என்கிறீர்களா…

‘விடுதலைப் புலிகளை உருவாக்கியது… பயிற்சி கொடுத்து ஆதரித்தது … அதன் மூலம் இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எப்போதும் அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என நினைத்தது… இதைல்லாம் நாங்கள் தவிடுபொடியாக்கிவிட்டோம்!’

‘நிலவைக் கூட இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளலாம்… ஆனால் இலங்கையின் ஒரு பிடி மண்ணைக் கூட இந்தியாவுடன் இணைக்க முடியாது…’

‘இலங்கையைப் பகைத்துக் கொண்டு ஆசியாவின் எந்தப் பகுதியிலும் இந்தியா இருக்க முடியாது. அமெரிக்காவுக்கு இடம் பெயர்நது செல்ல வேண்டியிருக்கும்!’

‘மிஸ்டர் எஸ்எம் கிருஷ்ணா, பேசாமல் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்… எங்களுக்கு புத்தி சொல்லும் அளவு உங்களுக்கு - இந்தியாவுக்கு- யோக்கியதை இல்லை..’

-இதையெல்லாம் இலங்கையின் மூன்றாம் தர அரசியல்வாதியோ… ஜேவிபி போன்ற கட்சிகளோ சொல்லவில்லை.

இந்தியா இரு உள்ளங்கைகளிலும் வைத்து தாங்கோ தாங்கென்று தாங்குகிறதே… அந்த மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சேவின் மேற்பார்வையில் செயல்படும் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘டிபென்ஸ்.எல்கே’ யில் நேற்று வெளியாகியுள்ள சிறப்புக் கட்டுரை இது.

கோத்தபாயவின் நெருங்கிய நண்பரும் கட்டுரையாளருமான எல்.ஜெயசூர்ய என்பவரால் எழுதப்பட்டிருக்கும் சிறப்புக் கட்டுரை .

presentation1

presentation1s

திடீரென இந்தப் பகுதியை சிங்களர்கள் நீக்கிவிட்டு நாடகமாடக் கூடும். எனவேதான் லிங்க் கொடுப்பதற்கு பதில் 'ஸ்க்ரீன்ஷாட்' எடுத்து வெளியிடுகிறோம்!

அந்தக் கட்டுரையின் சாராம்சம் இது:

இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் சம உரிமையும் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை போக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் லட்சணம் என்னவென்பதை உணராமல் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களைச் சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நீங்க யாரு?

கிருஷ்ணாவிடம் நாங்கள் கேட்பதெல்லாம், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான இலங்கைக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும்.

உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள். தேவையிருந்தால் கூட மூக்கை நுழைக்கும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள்.

இத்தனை நாட்கள் இலங்கைக்கு எதிராகப் பேசி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு மரியைதை.

இந்த இரண்டில் எந்த முடிவை மேற்கொள்வது என்ற உரிமையை உங்களுக்கே வழங்குகிறோம்.

இந்தியாவிற்கு மேலும் சில விஷயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் வழங்குவதாக இல்லை. ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போதுமானதாக அமைந்து விடும்.

அது மட்டுமின்றி இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை விரைவில் செல்லாததாக்கப்பட்டு தூக்கி வீசப்படும். அதன் மூலம் இலங்கையில் உள்ள இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் நாங்கள் துடைத்தெறிவோம். உங்கள் உடன்பாட்டுக்கு நாங்கள் ஏன் தலையாட்ட வேண்டும்!

விடுதலைப் புலிகளை உருவாக்கியது இந்தியாதான்!

இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்குடன்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்து விட்டோம். நிலவை கூட நீங்கள் இந்தியாவுடன் இணைத்து விடலாம். ஆனால் இலங்கையை இணைக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எங்களுக்கு எதிராக வாக்களிக்காததற்காக இந்தியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவின் இந்த முடிவுக்கு மென்மையாக பேசும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் புத்திசாலித்தனம் தான் காரணம்.

இந்தியாவில் உள்ள பலர் எங்களுக்கு எதிராக வாக்களிப்பதையே விரும்பியிருப்பார்கள். அவ்வாறு இந்தியா வாக்களித்திருந்தால் ஆசியாவில் அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் நிலப் பகுதியில் அண்டை நாடுகளுடன் சேர்ந்து இருப்பது இந்தியாவிற்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும்.

அத்தகைய சூழலில் இந்தியா அமெரிக்காவிற்கு அருகில் இடம்பெயர்ந்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்கும். அப்போது அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும்.

இதையெல்லாம் அறிந்துதான் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்த ஜப்பான் நாடு கடைசி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது….

-இப்படி போகிறது அந்தக் கட்டுரை.

இறையாண்மை.. . குறையாண்மை என பேடித்தனமாக உள்ளூரில் சவடால் விட்டுக் கொண்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும், தங்கள் முகத்தின் மீது மலத்தை அள்ளி வீசியிருக்கும் இந்த சிங்கள காடையர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்…

‘இந்தியப் பேரரசர் அசோகரின் வாரிசுகள் அவர்கள்… அதனால் இதையும் பொறுத்துக் கொள்வோம் என்றா…?’

யார் கண்டார்… சொன்னாலும் சொல்வார்கள்… நமக்கென்ன வந்தது!

-விதுரன்

Comments