‘நானே நலமாக இருக்கும் போது தேசியத் தலைவர் நலமாக இருக்க மாட்டாரா!’
பிரபாகரன் குறித்து உண்மையான தகவல்களைச் சொல்லக் கூடிய ஒருவர் இப்போதைக்கு உண்டென்றால் அவர் தலைவரின் நிழலாய்த் தொடரும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான்தான் என்று உறுதியாகக் கூறப்பட்டு வந்தது.
அவருடன் தொடர்பு கொள்ள பல்வேறு பகீரத முயற்சிகளை புலிகளின் பொறுப்பாளர்கள் பலர் மேற்கொண்டு வந்தனர். சர்வதேச ஊடகவியலாளர்கள் சிலரும் பெரும் முயற்சி செய்தனர்.
அதேநேரம் புலிகளின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு ரா அதிகாரிகள் சிலரும் பொட்டு அம்மான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயன்று வந்தனர். இதனால் 15 நாட்கள் அமைதி காத்த பொட்டு அம்மான் முதல் முறையாக புலிகளின் சர்வதேச உளவுப் பிரிவு பொறுப்பாளர்கலிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறிய நெத்தியடி வார்த்தைகள்தான் நீங்கள் தலைப்பில் படித்தது.
இது தொடர்பாக நக்கீரன் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி:
பிரபாகரன் பற்றிய பொய்யான தகவல்களை பரப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள இலங்கை அரசு, புலிகளின் புலனாய்வுப் பிரிவு (உளவுத்துறை) தலைவர் பொட்டு அம்மான் குறித்த தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளது.
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பொய்யான செய்தியை இலங்கை ராணுவம் அறிவித்த சமயத்தில் “புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படை தளபதி சூசை உள்பட முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர்”, என்று கொக்கரித்தது ராணுவம். இதையே, பத்திரிகையாளர்களிடமும் வெளிப்படுத்தினார் ராணுவ பேச்சாளர் உதயநாணயக்கார.
இதனை அடுத்து, பொட்டு அம்மான், சூசை உள்ளிட்டவர்களின் உடல்களைத் தேடி அலைந்தது ராணுவம். ஆனால் கிடைக்கவில்லை. ‘யாரோ ஒருவர் உடலைக் காட்டி இதுதான் பிரபாகரனின் உடல் என்று கூறியது போல, இவர்களுக்காகவும் அப்படி உடல்களை காட்டுவோமா’ என்று கோத்தபாய ராஜபக்சே அதிகாரிகளோடு விவாதித்தார். ஆனால் இதனை அறிந்த ராஜபக்சே, ‘கூடாது’ என்று தடுத்து விட்டதால், அந்த நிகழ்வு நடக்கவில்லை. அதனால் பொட்டு அம்மானை பற்றி தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார் ராஜபக்சே.
இந்த நிலையில், (20-க்கும் மேற்பட்ட ஊடறுப்பு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் பத்திரமாக வெளியேறிய சம்பவங்களை ‘பிரபாகரன் உயிருடன் உள்ளார்’ என்ற தலைப்பில் வெளியான நக்கீரன் இதழில் விரிவாகவே எழுதியிருந்தோம்) தீவிர தேடுதல் வேட்டையில் இலங்கை ராணுவம் மட்டுமல்ல இலங்கை உளவுத்துறையும் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘ரா’வும் ஈடுபட்டது.
இந்த உளவு அமைப்பினர், ‘பொட்டு அம்மான் தப்பித்து விட்டார், அவர் கொல்லப்படவில்லை’ என்று அறிந்து அதனை ராஜபக்சேவிடம் தெரிவித்தனர்.
இதனை அடுத்துதான், பத்திரிகையாளர்களை சமீபத்தில் மீண்டும் சந்தித்த உதயநாணயக்கார, “பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை அல்ல. அவரை தேடி வருகிறோம்”, என்று ஒப்புக் கொண்டார். இலங்கை பாதுகாப்புத் துறையும் இதனை வெளிப்படுத்தியது. ஆனால், பொட்டு குறித்த எந்தத் தகவல்களும் அதற்கு மேல் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் பொட்டு அம்மான் குறித்து நாம் விசாரித்தோம். கடந்த 10 நாட்களாக அமைதியாக இருந்த பொட்டு, செவ்வாய்க்கிழமை தனது உளவுத்துறையின் கீழ் சர்வதேச அளவில் செயல்படுபவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, “நலமாக இருக்கிறோம், பிறகு பேசுவோம்” என்று கதைத்துள்ளார். பொட்டுவின் குரலை கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட புலிகளின் உளவுப்பிரிவினர் தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கேட்டபோது, “நானே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் போது தேசிய தலைவர் இருக்க மாட்டாரா? நிம்மதியாக இருங்கள்”, என்று தெளிவுபடுத்தியுள்ளார் பொட்டு அம்மான் என்பதாக நமக்கு வரும் தகவல்கள் சொல்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தொடர்ந்து தான் அளித்துவரும் பேட்டிகளில் ‘பிரபாகரன் இல்லை’ என்பது போலவே பதிவு செய்து கொண்டு வருகிறார். இது உலகத் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது.
இதுபற்றி புலிகளின் சர்வதேச தொடர்புகளில் நாம் விசாரித்தபோது, “சர்வதேச நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. புலிகளின் செயல்பாடுகளுக்கு இது மிகப் பெரிய தடை. அதனால் தான் அந்தத் தடை நீக்கப்பட தற்போது உலகத் தமிழர்கள் ஒருமித்த குரலில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பிரபாகரன் இல்லை என்று அவர்கள் நம்பினால்தான் இந்தத் தடையை நீக்க உலக நாடுகள் முன்வரும். இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, சுமுகமான சூழல் உலகம் முழுவதும் பரவுகிற நேரத்தில் திடீரென பிரபாகரன் தோன்றுவார்”, என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
-நக்கீரன்
குறிப்பு: நக்கீரன் வெளியிட்டுள்ள இந்தப் படம் பழைய கோப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது.
Comments
Post a Comment