மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா

இட ஒதுக்கீட்டுக்கு தினமணி எதிர்ப்பு என்ற அளவிலேயே, வாசகர்களுடைய விமரிசனம் குறுகிப் போய் விட்டது. தினமணி உண்மையில் எச்சரிக்க வந்தது, இட ஒதுக்கீட்டு ரகளைகளைப் பற்றியே அல்ல!

அமெரிக்க நிர்பந்தத்தின் கீழ் புஷ் பதிவிக் காலம் முடிவதற்கு முன்னால் மன்மோகன் சிங் கையெழுத்துப் போட்டு ஒப்புக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை, அதில் உள்ள விவரங்களை நாட்டு மக்களுக்கு விவரம் சொல்லியோ பாராளு மன்றத்தில் முறையான விவாதம் நடத்தவோ செய்யாமல், பத்தோடு பதினொன்றாக நிறைவேற்றப் போகிற கபடத்தைப் பற்றி, அதன் பின் மறைந்திருக்கும் பொருளாதாரச் சுமை, இந்திய அரசின் இறையாண்மையே கேள்விக்குள்ளாகி இருக்கும் சூழலைக் குறித்துத் தனது அச்சத்தை வெளிப்படுத்தும் தலையங்கம் இது.

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது.
அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?


இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?


நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது.

இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

இது இன்றைய தினமணி இதழில் வெளியாகியிருக்கும் தலையங்கம்! ஒவ்வொரு இந்தியனும் நாட்டு நடப்பைக் குறித்து வெட்கித் தலை குனிய வேண்டிய தருணமாக மட்டும் அல்ல, பொங்கியெழ வேண்டிய தருணமாகவும் இருக்கிறது.

சுதந்திரம், உரிமைகள் என்பது எவரோ நமக்குக் கொடுத்து வருவது அல்ல. காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் எங்கோ கடையில் போய் காசுக்கு எடு என்ற கணக்கில் வாங்கி வந்தது இல்லை சுதந்திரம்! சுதந்திரம் என்பதே கொஞ்சம் பொறுப்புக்களோடு, விழிப்பாக இருப்பதோடு கூடியது, வெறும் வார்த்தை அல்ல. ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள், ஜனங்களுடைய அறிவை மழுங்க அடிப்பதில் வல்லவர்கள்!

விழிப்போடு தன்னுடைய கடமைகளைச் செய்து, தன்னுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவர்களுக்கு, இடைத்தேர்தல்கள் வரும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் பணமும் க்வார்டர், பிரியாணி கிடைக்கும். சுதந்திரம் எப்போதுமே கிடைக்காது. எல்லாவற்றையும் தொலைத்தபின், நெஞ்சில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து என்ன பயன்?

நித்யானந்தா ரஞ்சிதாவோடு சல்லாபம் செய்கிற காட்சியைக் கொஞ்சம் பொறாமையோடு பார்க்க விரும்புகிறவனுக்கு சுதந்திரத்தின் அருமை எப்படிப் புரியும்? இவன் இங்கே பர்மா பஜாரில் ஐநூறு ரூபாய் கொடுத்தாவது வாங்க அலைந்தோ அல்லது இணையத்தில் யாராவது அந்தக் கிளுகிளுப்பான காட்சிகளா வலையேற்றம் செய்திருக்க மாட்டார்களா என்று தேடிக் கொண்டிருக்கும்போதே காலடியில் உள்ள பூமி இவனிடமிருந்து களவாடப் படுவதை அறிவதே இல்லை. படித்தவர்கள் கூட்டம் இப்படி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிற அதே நேரம், பாமர மக்களுக்கு நாட்டு நடப்பு என்ன என்றே தெரிவதில்லை. அவர்களுக்கு அதைத் தெரிந்து ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதாக ஒரு சித்திரம் இங்கே நாட்டைச் சூறையாடும் சக்திகளுக்குப் பெருந்துணையாக இருக்கிறது.

1971 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்ஒரு நாள், ஸ்ரீ அரவிந்த அன்னை, உதார் பின்டோ என்கிற அடியவரிடம் சொல்கிறார்: "இந்தியாவைக் கருமேகங்கள் சூழ்வதைக் காண்கிறேன்"

ஸ்ரீ உதார் பின்டோ அன்னையிடம், அவர் அதைக் குறித்து ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்க, ஸ்ரீ அன்னை, அதற்கான காலம் கடந்து விட்டதாகக் கூறுகிறார். ஸ்ரீ உதார் பின்டோ: "அப்படியானால், நாங்கள் பிரார்த்தனை செய்வதற்கு ஒரு மந்திரத்தை அருளுங்கள்!"

அன்னை சிறிது நேரம் சமாதி நிலையில் இருந்த பிறகு அருளிய இந்தப் பிரார்த்தனை, இன்றைக்கும் நம்மை பிரச்சினைகள் சூழும்போது, அவற்றை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாக இருக்கிறது.

இந்த உரையாடல் நடந்த சில மாதங்களிலேயே, பங்களாதேஷ் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது, இந்திய-பாகிஸ்தான் யுத்தமாகவும் உருமாறியது.

பங்களாதேஷ் உருவானதை சகித்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான், தீவீரவாதிகளைத் இந்தியாவுக்குள் அனுப்பி, தொடர்ந்து நாச வேலைகள், சேதத்தை விளைவித்து வருவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

என்ன செய்வது என்பதைத் தெளிவாக அறிய முடியாத சூழ்நிலையில், இந்தப் பிரார்த்தனை எவ்வளவு வலிமையைத் தந்திருக்கிறது என்பதை, பிரார்த்தனைகளை நம்புகிறவர்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.

Comments