பிரபாகரன் மரண சான்றிதழை இலங்கை அரசு இதுவரை தரவில்லை!! – சிபிஐ

டெல்லி: பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதிலும், இதுவரை அதுதொடர்பான மரணச் சான்றிதழை இலங்கை அரசு இந்தியாவிடம் வழங்கவே இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தாங்கள் கேட்டு வந்தாலும், இலங்கை இந்த விஷயத்தில் மௌனம் சாதித்து வருவதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

பிரபாகரன் மரணம் மற்றும் மரணச் சான்றிதழ் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சிபிஐக்கு தகவல் கோரப்பட்டிருந்தது.

அந்த மனுவுக்கு சிபிஐ கண்காணிப்பாளர் பி.என்.மிஸ்ரா அளித்துள்ள பதிலில்தான் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுயிருப்பதாவது:

பிரபாகரன் இறந்ததாக தகவல் வந்ததை அடுத்து உரிய வழிகளில் இலங்கைக்கு தகவல் அனுப்பி அவருடைய இறப்பு சான்றிதழைக் கேட்டோம். இந்திய வெளியுறவு துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரை பிரபாகரன் மரண சான்றிதழை இலங்கை அரசு தரவில்லை. இதற்காக இன்று வரை காத்திருக்கிறோம். மரண சான்றிதழை பெறுவதற்கு அதற்குரிய வழிமுறைகளின்படி தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் பொட்டு அம்மானும் சேர்க்கப்பட்டார்.

இந்த இருவரும் பிடிபடாததால், இவர்கள் இருவரும் வழக்கிலிருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு தனி வழக்காக மாற்றப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில்தான் மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை கூறியது. இதையடுத்து வழக்கை முடிக்க மரணச் சான்றிதழைக் கோரியுள்ளோம். ஆனால் இதுவரை அதுகுறித்து இலங்கை அரசு பதிலளிக்காமல் மெளனம் சாதித்து வருகிறது” என்றார்.

ஆனால் சில வாரங்களுக்கு முன்பு, ‘பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளை’ இலங்கை அரசு இந்தியாவுக்கு தந்துவிட்டதாக அறிவித்தது. இலங்கை நீதிமன்றத்திலும் இதனைத் தெரிவித்திருந்தனர்.

ஆனால் பிரபாகரன் நலமாக பாதுகாப்பாக உள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். இப்போது இலங்கை அரசின் மரணச் சான்றிதழ் விவகாரமே பொய் என்று சிபிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

Comments