ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி

இலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அவசர மாநாட்டில் இலங்கை அரசாங்கத்ததுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் போரின் பொழுது இலங்கைப் படைகளாலும், விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும் மற்றும் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உதவி நிறுவனங்கள் சென்றுவர தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 17 நாடுகளால் கிட்டத்தட்ட இலங்கை அரசாங்க கருத்துக்கு முரணான தீர்மானம் ஒன்று இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.

இறுதியாக இந்த தீர்மானத்தில் இணக்கத்தை காணும் வகையில் சில மாற்றங்களுடன் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆயினும் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிராக 22 வாக்குகளும், ஆதரவாக 17 வாக்குகள் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதேவேளை, இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வதேச உதவி கோரும் தீர்மானம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அது வெற்றி பெற்றுள்ளது.

அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடடைத்தன. 6 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

Comments